புவிவெப்பமயமதாலை தடுக்க பசுமை வாயுக்களை அதிகம் வெளியேற்றும் நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் பயன்பாட்டை குறைத்து, சூரிய சக்தி, காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளும், செயல்பாட்டாளர்களும் வலியுறுத்துகின்றனர். தற்போது மொத்த எரிபொருள் நுகர்வில், கச்சா எண்ணெயின் பங்கு 31.2 சதவீதமாகவும், நிலக்கரியின் பங்கு 27.2 சதவீதமாகவும், அணுசக்தியின் பங்கு 4.3 சதவீதமாகவும், பசுமை எரிசக்தியின் பங்கு 12.6 சதவீதமாகவும் உள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் புதிய முதலீடுகளை செய்வது அறமற்ற, பைத்தியகாரத் தனமான செயல் என்று ஐ.நா சபையின் தலைவர் அன்டோனியோ குட்டுரெஸ் சமீபத்தில் கூறியிருந்தார். பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஷெல் நிறுவனத்தின் தலைவர் வாயல் சாவன், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவை அதிகரித்துள்ளதாகவும், பசுமை எரிபொருட்கள் உற்பத்தி இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு அதிகரிக்கவில்லை என்று கூறியுள்ளார். 2030 வரை கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை, தற்போதைய அளவில் தொடர ஷெல் முடிவு செய்துள்ளதற்கு பருவநிலை விஞ்ஞானிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டால், அது உலக அளவில் விலைவாசி உயர்வை அதிகரிக்கச் செய்து, ஏழை நாடுகளுக்கு மிக அதிக பாதிப்பு ஏற்படும் என்று வாயல் சாவன் சுட்டிகாட்டியுள்ளார்.