“மன்னித்துவிடு உன்னை பழி வாங்கவே...“ சென்னை வரவழைத்து விஷம் கொடுத்த காதலி? - இன்ஸ்டா காதலும்... அதிர்ச்சி வாக்குமூலமும்

Update: 2023-04-17 03:09 GMT

சென்னையில், காதலனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து காதலி கொன்ற வழக்கில், திடீர் திருப்பமாக சிசிடிவியில் வெளியான காட்சி, காதலியை நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை விரிவாக பார்ப்போம்...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். 16 வயதான சிறுமியை காதலித்து வந்த சஞ்சீவ்குமார், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, அவரை சந்திக்க கடந்த 7ம் தேதி சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னையில் உள்ள பல்வேறு இடங்களை, தனது காதலியுடன் சுற்றிப்பார்த்துவிட்டு, பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய சஞ்சீவ்குமார், சொந்த ஊர் திரும்புவதற்காக இரவு 10 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். அவரை வழியனுப்ப காதலியும் உடன் வந்துள்ளார்.

விஷம் கலந்த குளிர்பானத்தை சிறுமி கொடுத்ததாகவும், அதை குடித்த பின்னர் "என்னை மன்னித்துவிடு உன்னை பழி வாங்கவே, சென்னை வரவழைத்ததாகவும், குளிர்பானத்தில் எலி பேஸ்ட்டை கலந்து கொடுத்திருப்பதாகவும் காதலி கூற, சஞ்சீவ் குமார் அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, கோயம்பேட்டில் காதலனுடன் சிறுமி இருப்பதை அறிந்த அவரது பெற்றோர், உடனடியாக அங்கு புறப்பட்டு, சஞ்சீவ்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பயந்துபோன சஞ்சீவ்குமார், கோயம்பேட்டிலேயே இரவு முழுவதும் தங்கியுள்ளார். பின்னர் விடிந்ததும், சென்னையில் உள்ள தனது மாமா செல்வராஜ் வீட்டிற்கு சென்று, குளிர்பானத்தில் காதலி எலி பேஸ்டை கலந்து கொடுத்ததை கூறியுள்ளார்.

உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சீவ்குமார், போலீசாரிடம் நடந்தததை மரண வாக்குமூலமாக அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதாகக் கூறி, சஞ்சீவ்குமாரை உறவினர்கள் அழைத்துச் சென்ற நிலையில், போகும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், போலீசுக்கே தெரியாமல், உறவினர்கள் சஞ்சீவ்குமாரின் உடலை, சொந்த ஊரான பரமக்குடி கொண்டு சென்று, இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதுகுறித்து சஞ்சீவ்குமாரின் மாமா செல்வராஜ், கோயம்பேடு போலீசாருக்கு நடந்த விவரங்களை தெரிவிக்க, உடனடியாக பரமக்குடி போலீசாரை தொடர்புகொண்டு, விவரங்களை கூறியுள்ளனர் கோயம்பேடு போலீசார்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சஞ்சீவ்குமாரின் உடலை பரமக்குடி போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மகனை பறிகொடுத்துவிட்டோமே என தாய் கூறியது வேதனை அளித்தது.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் சஞ்சீவ் குமாருக்கு சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டு, நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, கடந்த ஆண்டு அண்ணா நகர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், அப்போது சஞ்சீவ்குமாருக்கு 17 வயதே இருந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.

அதன் பின்னரும் அடிக்கடி சிறுமியிடம் தொலைபேசி மூலமாக சஞ்சீவ்குமார் பேசிவந்ததும் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தான், சஞ்சீவ் குமார் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கடையில் இருந்து குளிர்பானத்தை சஞ்சீவ்குமாரே வாங்கி வந்தது தெரியவந்ததால், மரண வாக்குமூலத்தில் அவர் கூறியபடி, விஷம் கலந்த குளிர்பானத்தை சிறுமி கொடுக்கவில்லை என போலீசார் உறுதி செய்தனர்.

அப்படியானால், சிறுமியின் குடும்பத்தினரை பழிவாங்க, சஞ்சீவ்குமார் தானாகவே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உண்மையில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்