தண்ணி காட்டிய மீன் திருடர்கள்.. சிக்கியதும் வெறி தீர அடித்து துவைத்த ஓனர்.. "அண்ணே விட்ருங்கண்ணே.."கதறிய காட்சி

Update: 2023-07-22 09:16 GMT

ராஜபாளையத்தில் குத்தகைக்கு விடப்பட்ட கண்மாயில் மீன்களை திருடிய கும்பலை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இவற்றை ஏலம் மூலமாக குத்தகைக்கு எடுத்து பலர் மீன்களை வளர்த்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக மறுங்கூர் கண்மாயில் உள்ள மீன்கள் அதிக அளவில் திருடு போயுள்ளது. விரக்தி அடைந்த குத்தகைதாரர் பணம் செலவிட்டும், ஆட்களை நியமித்தும், மீன் திருடர்களை வலைவீசி தேடி வந்துள்ளார்.

ஆனாலும், பலமுறை கண்மாயில் இருந்து மீன்கள் திருடுபோனதால், திருடர்களை பிடிக்க முடியாமல் திணறி வந்துள்ளார்.

இந்த நிலையில், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின்னர், ராஜபாளையம் சோமையாபுரம் பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று, மீன்களை திருடியபோது, கண்மாயில் கண்காணிப்பில் இருந்த நபர்கள், அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

மீன் கொள்ளையர்கள் பிடிக்கப்பட்ட சம்பவம், உரிமையாளருக்கு தெரியவர, தனது ஆத்திரம் தீரும் வரை, கட்டையால் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீன் கொள்ளையர்களை மீட்டு, காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கட்டையால் தாக்கியதில் காயமடைந்த 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குத்தகைக்கு விடப்பட்ட கண்மாயில், உரிமையாளருக்கே தண்ணி காட்டி, தொடர்ந்து மீன்களை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்