தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் கிருஷ்ணா, 50 ஆண்டுகளாக 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் 1942-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி பிறந்த இவர், 1960-களில் குல கோத்ரலு, பதந்தி முந்துகு உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர், 1966-ஆம் ஆண்டு கூடாச்சாரி 116 என்ற படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார். இப்படம் நடிகர் கிருஷ்ணாவின் கலைப்பயணத்தில் மட்டுமின்றி தெலுங்கு திரைத்துறைக்கும் ஒரு மைல் கல்லாக அமைந்தது. ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான ஸ்பை த்ரில்லராக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன் பின்னர் அல்லூரி சீதாராம ராஜு, கரானா டொங்கா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கிருஷ்ணா, தமிழில் நடிகர் விக்ரம் நடித்த கந்தசாமி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.