கணவனை கத்தியால் குத்திவிட்டு நாடகம்... பிரேத பரிசோதனையால் சிக்கிய மனைவி

Update: 2023-07-19 23:30 GMT

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ளது கலவரகுன்று என்ற கிராமம்.

அன்று போலீசார் அந்த கிராமத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

அதே பகுதியை சேர்ந்த நிஷா என்பவரின் கூடாரத்துக்கு சென்ற போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

சிறிது நேரத்திற்கு பிறகு நிஷாவை காரில் ஏற்றி அழைத்து சென்றிருக்கிறார்கள்.

என்ன நடக்கிறது..? ஏன் போலீசார் நிஷாவை அழைத்து செல்கிறார்கள்..?அவள் செய்த குற்றம் தான் என்ன? போன்ற கேள்விகள் அங்கு கூடியிருந்த ஒவ்வொருவர் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த கேள்விக்கான விடை. நிஷா ஒரு கொலை குற்றவாளி.

ஆம்... கணவனை குத்தி கொன்று விட்டு, விபத்து நாடகமாடியவர் தான் இந்த நிஷா..!

கொல்லப்பட்டவர் வினோத். கூலி தொழிலாளி. நிஷா தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

சம்பவம் நடந்த அன்று வலிப்பு ஏற்பட்டு வினோத் கீழே விழுந்ததால் இதயத்தில் பலமான காயம் ஏற்பட்டுவிட்டதாக, கணவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார் நிஷா.

அந்த காயம் இதய துடிப்பை நிறுத்தும் அளவிற்கு ஆழமாக இருந்ததால், அதிகபடியான இரத்தம் உடலுக்குள் உறைந்து வினோத் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இறந்து போயிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வினோத்தின் சடலத்தை கைபற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இயற்கை மரணமென அந்த வழக்கை மூடி வைத்த காவல்துறையினர், அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கி போயிருக்கிறார்கள். இந்த சூழலில் தான் வினோத்தின் உடற்கூறாய்வு அறிக்கை முடிவுகள், அந்த வழக்கை மீண்டும் கையிலெடுக்க வைத்திருக்கிறது.

வினோத்தின் உடலிருந்த காயம் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதால் ஏற்பட்டது என்று அறிக்கை முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. உடனே போலீசாரின் விசாரணை வேகமெடுத்திருக்கிறது.

நிஷாவிடம் இருந்தே போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரின் பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தால் போலீசாரின் விசாரணை இன்னும் இறுக்கமாக தொடங்கி இருக்கிறது.

அந்த கிடுக்குபிடி விசாரணையில் தான், நிஷா கணவை குத்தி கொன்ற பயங்கரம் தெரிய வந்திருகிறது.

வினோத்திற்கு மனைவியின் நடத்தையில் வெகு நாட்களாக சந்தேகம் இருந்திருக்கிறது.

சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த வினோத், நிஷா யாருடனோ செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறார். உடனே மனைவியிடம் போனை கேட்டிருக்கிறார். நிஷா போனை தர மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இறுதியில் நிஷாவின் கையை திருகி, போனை பறிக்க முயன்றிருக்கிறார் வினோத். நடந்த களபரத்தில் அருகிலிருந்த கத்தியை எடுத்து கணவரின் இதயத்தில் இறங்கியிருக்கிறார் நிஷா.

நிலைகுலைந்த வினோத் மயங்கிவிடவே, ரத்தகரை படிந்த அவரது துணிகளை மாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்று விபத்து நாடகம் ஆடியிருக்கிறார்.

வினோத் தீவிர சிகிச்சையில் இருந்த போது வீட்டுக்கு வந்த நிஷா, வீட்டிலிருந்த தடையங்களை அழித்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், நிஷாவை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்