மாமியாரை கொல்ல ஆணாக மாறிய மருமகள்.. எம ராணியான வீட்டுக்கு வந்த மகாலட்சுமி - கோபுர கொண்டையால் சிக்கினார்

Update: 2023-05-31 05:11 GMT

போலீசில் சிக்காமல் இருக்க, கொள்ளையனாக வேடமிட்ட மருமகள், பக்கா பிளான் போட்டு, மாமியாரை அடித்தே கொன்ற அதிர்ச்சி சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

நெல்லை மாவட்டம் வடுகன்பட்டியில், ஆண் உடை அணிந்தபடி வீட்டில் புகுந்த மர்மநபர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை சரமாரியாக தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படுகாயமடைந்த நிலையில் கிடந்த மூதாட்டியை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாார்.

தகவலின் பேரில் வந்த போலீசார், இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்தனர். மூதாட்டியை கொலை செய்து 5 சவரன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர் யார்? என்பதை கண்டுபிடிக்க, அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

ஆனால், அந்த சிசிடிவி காட்சியை பார்த்தபோது, போலீசாரே அதிர்ந்து போயினர்... கொலையாளி​ நகைக்காக வெளியில் இருந்து வரவில்லை, பசுத்தோல் போர்த்திய புலியாக, அதே வீட்டைச் சேர்ந்த நபர்தான் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

அதாவது, இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது கொலை செய்யப்பட்ட மூதாட்டியான சீதாராம லெட்சுமியின் மருமகள் மகாலட்சுமி என்பதை போலீசார் உறுதி செய்தபோது, உறவினர்களுக்கு பேரதிர்ச்சி...

மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டு, ஒரு ஆணைப் போல் உடை அணிந்து, தலையில் ஹெல்மெட்டுடன் வந்த மகாலட்சுமி, பக்கவாக பிளான் போட்டு, இந்த சம்பவத்தை கச்சிதமாக முடித்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், மகாலட்சுமி போலீசிடம் சிக்கியதுதான்... மண்டை மேல் இருக்குற கொண்டை காட்டிக் கொடுத்தது போல, பக்கா பிளானுடன் வீட்டில் நுழைந்த மகாலட்சுமி, வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் சிக்காமல் இருக்க, ஹெல்மெட்டுடன் வந்துள்ளார். ஆனால் சிசிடிவியை பார்த்தபடியே அந்த ஹெல்மெட்டை மகாலட்சுமி தனது தலையில் அணிந்ததுதான், போலீசார் அவரை நெருங்குவதற்கு, சுலபமான வழியை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதன் பிறகு மகாலட்சுமியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

துலுக்கர்குளம் பஞ்சாயத்து துணைத் தலைவரான சண்முகவேல் - சீதாராமலெட்சுமி தம்பதியின் மகனான ராமசாமியை, கடந்த சில வருடங்களுக்கு முன்பு மகாலெட்சுமி திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

திருமணம் நடந்த நாள் முதல், மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே, அடிக்க வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த இருவருக்கும் இடையே பிரச்சினையை போக்க எண்ணிய மாமனார் சண்முகவேல், தனது வீட்டின் பின்புறத்தில் புதிதாக வீட்டை கட்டி, அதனை தனது மகன் ராமசாமிக்கு கொடுத்துள்ளார்.

புயல் ஓய்ந்தாலும் அதன் வடு மறையாது என்பது போல, தனி வீட்டில் குடியேறியபோதும், மாமியார், மருமகள் சண்டை ஓய்ந்தபாடில்லை...

ஒரு கட்டத்தில் மாமியாருக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த மருமகள் மகாலட்சுமி, அவரை தீர்த்துக்கட்ட மகா சதியை தீட்டியுள்ளார். அதன் பேரிலேயே, ஆண் கொள்ளையனாக வேடமிட்டு, மாமியார் வீட்டிற்குள் நுழைந்த மகாலட்சுமி, கச்சிதமாக தனது காரியத்தை செய்துள்ளார்.

கொள்ளையன்தான் கொலை செய்தான் என ஊரை நம்ப வைக்க, மூதாட்டியின் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக, மகாலட்சுமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

மாமியார் மருமகள் சண்டை இல்லாத குடும்பம் ஏது?... அதற்காக, ஒருவரை ஒருவர் அழிக்க முற்பட்டால், குடும்பம் என்ற சொல் அகராதியில் இல்லாமல் போய்விடும் என்பதே இந்த சம்பவத்தின் வெளிப்பாடாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்