மதுபானம் குடித்த சில நிமிடங்களில் ரத்ததில் பாய்ந்த ’சயனைடு’-போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிகுருநாதன். 55 வயதான இவர் மங்கை நல்லூர் சாலையில் இரும்பு பட்டறை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 63 வயதான பூராசாமி என்பவர் 3 மாதங்களுக்கு முன்பாக பழனிகுருநாதனிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார்... வயது முதிர்ந்த இருவரும் கடந்த 12 ஆம் தேதி மாலை 6 மணியளவில், இரும்பு பட்டறையில் மயங்கிய நிலையில், கீழே விழுந்து கிடந்தது அக்கம்பக்கத்தினரை அதிர்ச்சியடைய செய்தது. உடனே, இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், அவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இருவரும் உயிரிழந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இருவருக்கும் குடும்ப பிரச்சினையோ... எந்தவொரு இணை நோய்களும் இல்லையென கூறிய உறவினர்கள், அரசு மதுபானக் கூடத்தில் வாங்கிய மதுபானத்தை குடித்தாதலேயே உயிரிழந்ததாக கூறி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த தகவலின் அடிப்படையில், சம்பவம் நடைபெற்ற இரும்பு பட்டறைக்கு சென்ற போலீசார், அங்கு டாஸ்மாக்கில் இருந்து வாங்கிய இரு மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தனர்.... இரு மது பாட்டில்களில், ஒன்று காலி பாட்டிலாகவும், மற்றொன்று பிரிக்கப்படாமல் மதுவுடன் முழு பாட்டிலாகவும் இருந்ததை கண்டனர். பின்னர், இரு மதுபாட்டில்களையும் கைப்பற்றிய போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.... அங்கு உடற்கூராய்வின் அறிக்கை வெளியான போது அதிர்ச்சி காத்திருந்தது. இருவரது இரத்தத்திலும் சயனைடு கலந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது...இதையறிந்த கொதித்துபோன இருவரது உறவினர்களும், போராட்டத்தை தீவிரப்படுத்திய நிலையில், குமாரமங்கலத்தில் இருந்த 2 டாஸ்மார்க் மதுபான கடைகள் மூடப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே அருகில் உள்ள பாரில் மது வாங்கி குடித்து இருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திலும் இதேபோல் அவர்கள் அருந்திய மதுபானத்தில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்தது. மேலும், தஞ்சாவூர் சம்பவத்தில் இருவரும் உயிரிழந்த இடத்திற்கு அருகே தங்கப்பட்டறை இருந்ததும், அங்கு சயனைடு பயன்படுத்தப்படுவதால் சம்பவம் கொலையா ? தற்கொலையா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மயிலாடுதுறையில் அரங்கேறியுள்ள இந்த சம்பவமும் இரும்பு பட்டறையில் வைத்து நிகழ்ந்திருப்பதால், இதன் பின்னணியில் உள்ள மர்மத்தை கண்டு பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது... உயிரிழந்த இரும்பு கடை பட்டறையின் உரிமையாளரான பழனிகுருநாதனின் தந்தை வேலாயுதத்திற்க்கு 2 மனைவிகள் இருந்துள்ளனர். இதில், பழனிகுருநாதன் இரண்டாம் தாரத்திற்கு பிறந்த மகனான நிலையில், முதல் தாரத்தின் மகன்களான, மனோகரன் மற்றும் பாஸ்கரனுக்கும், பழனிகுருநாதனுக்கும் பூர்விக சொத்துக்களை பிரிப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது.
இதில், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே, சகோதரர்கள் இருவரும் இரு மதுபான பாட்டில்கள் வாங்கி, அதை அதே பகுதியை சேர்ந்த இருவர் மூலம் பழனிகுருநாதனிடம் கொடுத்துள்ளனர்...இதை சதித்திட்டத்தை அறிந்திராத பழனிகுருநாதன், மதுபானத்தை வாங்கி குடிக்கவே, அதை பட்டறையில் பணிபுரிந்து கொண்டிருந்த 63 வயது முதியவரான அப்பாவி பூராசாமிக்கு ஊற்றி கொடுத்துள்ளார். இருவரும் ஒரு மதுபாட்டிலை காலி செய்துவிட்டு கதை பேசி கொண்டிருந்த போது, உள்ளே சென்ற சயனைடு இருவரின் உயிரை பறித்துள்ளது.