கடல் கொந்தளிப்பு காரணமாக சாலை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவதி.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். பழவேற்காடு சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் இருந்து காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகம், எல்என்டி கப்பல் கட்டும் தளம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் தினசரி வேலைக்கு சென்று வருகின்றனர். தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மான்டஸ் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் கொந்தளித்து சுமார் 10அடி உயரத்திற்கு அலைகள் மேலே எழுகின்றன. வங்காள விரிகுடா கடலுக்கும் அருகே உள்ள பழவேற்காடு ஏரிக்கும் இடையே பழவேற்காடு - காட்டுப்பள்ளி செல்லும் சாலை அமைந்துள்ளது. இதனால் பல இடங்களில் கடல் சீற்றத்தின் போது அலைகள் சாலையை தொட்டு செல்வதுண்டு. கருங்காலி பகுதியில் பழைய முகத்துவாரத்தில் கடல் கொந்தளித்து அலைகள் ஆர்ப்பரித்து சாலையில் புகுந்து ஏரியுடன் கலந்துள்ளது. இதனால் சாலை தண்ணீரில் மூழ்கியதால் பழவேற்காடு - காட்டுப்பள்ளி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனினும் பொதுமக்கள் கடல் மணல் பரப்பில் தங்களது வாகனங்களை செலுத்தி ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர்.