திமுக எம்.பி திருச்சி சிவாவின் மருமகன் வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார் உட்பட 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் வெளியே அமைந்துள்ள ஆவின் பாலகம், எம்.பி திருச்சி சிவாவின் மகள் பெயரில் உள்ளது. கடந்த 3ம் தேதி ஆவின் பாலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில், வாகனத்தை திருடிய நபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து, அடித்து திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பிடிபட்ட விஜயசாரதி மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, முத்துக்குமார் தாக்கியதால் விஜய சாரதிக்கு கால் முறிந்ததாகவும் கிட்னியில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறி, கடந்த 13-ம் தேதி, முத்துக்குமார் உள்ளிட்ட 4 பேர் மீதும், 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு வழக்கறிஞர் முத்துக்குமார் சென்ற நிலையில், அவரை ஜூன் 2ம் தேதி திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இது அமைச்சர் கே.என்.நேரு தூண்டுதலால் போடப்பட்ட பொய் வழக்கு என்று, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முத்துக்குமார் முன்வைத்துள்ளார்.