உயிருடன் உள்ள பெண்ணை இறந்ததாக கூறி மோசடி - டாக்டரை மிரட்டி பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது
மருத்துவரை மிரட்டி பணம் பறித்ததாக பாஜக ஒன்றிய செயலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் பகுதியில் முகமது அப்துல் காதர் என்பவர் மருத்துவராக உள்ளார். இவரிடம் கடந்த மாதம் 29-ஆம் தேதி, பாலசுந்தரி என்ற பெண்மணி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் உறவினர்களான வீரசேகரன் மற்றும் முகேஷ் ஆகியோர், மருத்துவர் அளித்த சிகிச்சையால் அப்பெண் உயிரிழந்ததாக மிரட்டி மருத்துவர் முகமது அப்துல் காதரிடமிருந்து 2 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர். இதில் முகேஷ், பாஜக ஒன்றிய செயலாளராக உள்ளார். இதனிடையே, அப்பெண் நலமாக இருப்பதை அறிந்த மருத்துவர், போலீசில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.