அத்தை மகனுடன் காதல் திருமணம்... ஊரைவிட்டு ஒதுக்கிய ஊர்க்காரர்கள்

Update: 2023-06-18 23:29 GMT

இந்த 21ம் ஆம் நூற்றாண்டிலும் சொந்த சமூகத்திற்குள்ளேயே இருக்கும் கட்டுத்திட்டான விதிமுறைகள், அழிக்க முடியாத ஒன்றாக சவால்விட்டு நிற்கின்றன.... நீதிமன்றம் வளர்ந்துவிட்ட காலத்திலும், பஞ்சாயத்து கூட்டி தண்டப் பணம் கட்ட வைப்பது, ஊரிலிருந்து ஒதுக்கி வைப்பது என இன்னும் கூட அந்த அவலங்கள் நிகழ்தபடிதான் இருக்கின்றது... அதற்கு சாட்சியாக தமிழகத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிமுக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி - மதி தம்பதி. இவர்களுக்கு 21 வயதான அபிராமி என்ற மகள் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அபிராமி, தன் அத்தை மகனை காதல் திருமணம் செய்து கொண்டார்.... திருணம் செய்த கையோடு வீட்டிற்கு சென்றால், ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பஞ்சாயத்து கூட்டி 50 ஆயிரம் தண்டப்பணம் கட்ட சொல்வார்கள் என பயந்து போன அபிராமி, காதல் கணவருடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தார். ஊர்க்காரர்களை நேரில் அழைத்த காவல்துறையினர் "திருமண வயதை எட்டிய நிலையில்தான், இருவரும் திருமணம் செய்துள்ளனர், இதில் ஊர்க்காரர்கள் தலையிடக்கூடாது" என எச்சரித்து அனுப்பினர்.... ஆனால் ஊர்க்காரர்களோ, தங்கள் சமூக விதிமுறைகள் தான் முக்கியம் என கருதினர். ஊர் நிர்வாகிகள் ரத்தினம், ராஜேந்திரன், வெள்ளையன் உள்ளிட்ட சிலர் இந்த சம்பவத்தில் முழு மூச்சாக செயல்பட்டு, அபிராமியின், பெற்றோரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட வீடு இருந்தும், அந்த வீட்டிற்கு செல்லும் வழியில் முள்ளை போட்டு, மதி -யை அங்கே வசிக்க முடியாதபடி செய்துள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த சுதா ,சின்னத்தம்பி. தினகரன், ராஜா,வேலு உள்ளிட்ட ஆறு குடும்பத்தையும், பல்வேறு காரணங்களை கூறி மூன்று வருடங்களாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். திருமணம், ஊர் திருவிழா, உட்பட அனைத்து சுபநிகழ்ச்சிகளிலும் இவர்களை கலந்து கொள்ள முடியாதபடி செய்துவிட்டது ஊர் பஞ்சாயத்து. மேலும் இவர்களுக்கு உதவ முன்வரும் ஊர்க்காரர்களையும், ஒதுக்கி வைப்போம் என 3 ஆண்டுகளாக மிரட்டி வருகின்றனர். இவர்களுக்கு பயந்த ஊர் மக்களும் வெளியில் அடங்கி ஒடுங்கியுள்ளனர் பாதிக்கப்பட்ட 6 குடும்பத்தினரும் , மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியர் ,முதல்வர் தனிப்பிரிவு என அதிகாரத்தின் அத்தனை கதவுகளையும் தட்டிப்பார்த்துவிட்டனர். ஆனால், தமிழக அரசு இதுவரை அந்த மனுக்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்