ஆருத்ரா மோசடி..சிக்கும் பாஜக நிர்வாகிகள்... கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்...
- சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி, முதலீட்டாளர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- இந்த வழக்கில், நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் ராஜ், பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கைது செய்யப்பட்ட அனைவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல் ராஜை, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- இந்த விசாரணையில் மைக்கேல் ராஜ், பல திடுக்கிடும் தகவலை கூறியபோது, போலீசார் அதிர்ந்தனர். அதாவது, ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் அனைத்து கிளைகளின் வங்கி கணக்குகளையும், மைக்கேல் ராஜே கையாண்டுள்ளார்.
- முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற சுமார் ஆயிரத்து 749 கோடி ரூபாயை, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்ததாக மைக்கேல் ராஜ் ஒப்புக்கொண்டு உள்ளார்.
- மேலும் முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தில் மைக்கேல் ராஜ் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை குவித்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.
- மோசடியில் ஈடுபட்ட இந்த நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள், வெளிநாடுகளில் எங்கு தலைமறைவாக உள்ளனர் என்பது குறித்தும், மைக்கேல் ராஜிடம் இருந்து கறந்துள்ளனர் போலீசார்...
- ஆயிரத்து 749 கோடி ரூபாய் பணத்தை எந்தெந்த வங்கி கணக்கிற்கு அவர் பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என்பதை அறிந்து, அதன் பட்டியலை தயாரித்து, மேல் விசாரணை நடத்த உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
- அதனைத் தொடர்ந்து, இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபரும், பாஜக கட்சியில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளரான ஹரீஸிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில், அவர் அளித்த தகவல்கள் மேலும் அதிர்ச்சியை அளித்தன.
- முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தில் 130 கோடி ரூபாயை, பாஜக கட்சியில் பதவி வாங்குவதற்காக, பாஜக நிர்வாகிகளான அலெக்ஸ் மற்றும் சுதாகர் ஆகியோரிடம் கொடுத்ததாக ஹரீஸ் பகீர் வாக்குமூலம் அளித்தார்.
- இதுதொடர்பாக, பாஜக நிர்வாகிகளான அலெக்ஸ் மற்றும் சுதாகர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அதுமட்டுமல்லாமல் நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ், 15 கோடி ரூபாய் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டில் தலைமறைவான நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து சிக்கி வருவதால், பாதிக்கப்பட்டவர்களில் சிலர், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அதன் மாநில தலைவர் அண்ணாமலையை சந்திக்க வந்தனர். ஆனால், அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் மனுவை வாங்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.