திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் பாரதிகுமார். இவர் ஆம்பூர் பஜார் பகுதியில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். பாரதிகுமாருக்கு வந்த செல்போன் அழைப்பு ஒன்றில் கர்நாடகாவில் இருந்து பேசுவதாகவும், தங்களை எனக்கு நன்கு தெரியும் என கூறி நபர் ஒருவர் பேச ஆரம்பித்துள்ளார். தங்கள் கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவரின் நிலத்தில் வீடு கட்டும் பணிக்காக நிலத்தை தோண்டும்போது புதைகுழியில் தங்க கட்டிகள் கிடைத்தது என தெரிவித்துள்ளார். இந்த தகவல் தங்களையும் சேர்த்து 3 பேருக்கு மட்டுமே தெரியும் எனவும், யாரிடமும் இதை பற்றி தெரிவிக்காமல் வாருங்கள் தங்கத்தை பாதி விலைக்கு தருகிறேன் என கூறி கர்நாடகாவிற்கு அழைத்திருக்கிறார். சுதாரித்து கொண்ட பாரதிகுமார் தன் தந்தை போலீசார் எனவும், அவரிடம் தெரிவித்து விட்டு நான் வருகிறேன் என கூறியதால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் சற்று பின் வாங்கினார். இது தொடர்பான ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.