அல்லேரி மலை கிராம சாலையும்.. அடுத்தடுத்து பறிபோகும் உயிர்களும்..- “ரோடு இருந்தா அப்பாவ காப்பாற்றி இருப்போம்..''- மறுக்கும் ஆட்சியர்.. கொதிக்கும் மக்கள் - அல்லேரி மலை கிராமம் - நேரடி விசிட்

Update: 2023-07-22 05:00 GMT

வேலூர் மாவட்ட அல்லேரி மலைகிராமத்தில் பாம்பு கடித்து இருவர் உயிரிழந்த நிலையில், போதிய சாலை வசதி இல்லாததே மரணங்களுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ள நிலையில், சாலை வசதி குறித்து தந்தி டிவி நடத்திய கள ஆய்வை பார்க்கலாம்...

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள அல்லேரி அடுத்த ஆட்டுக்காரன் துரை என்ற மலை கிராமத்தில், புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சங்கர் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார்.

இதேபோல், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, அல்லேரி மலை கிராமத்தில் ஒன்றரை வயது சிறுமி பாம்பு கடித்து பலியான நிலையில், போதிய சாலை வசதி இல்லாததே தொடர் உயிரிழப்புகளுக்கு காரணம் என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதேசமயம், இலகுரக வாகனங்கள் பயன்படுத்தும் வகையில் மண் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அவசர கால ஊர்தியை மக்கள் பயன்படுத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், தந்தி டிவியின் சார்பில் அல்லேரி மலைச்சாலையில் கள ஆய்வு மேற்கொண்டோம்...

பெரும் சிரமத்திற்கு பின் அல்லேரி மலைகிராமம் சென்ற நாம், அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டறிந்தோம்..

மண்சாலை அமைத்தும் மழையில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறும் அவர்கள், அனைத்து தேவைகளுக்கு மலை அடிவாரத்திற்கே செல்ல வேண்டி இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

"மண் சாலை அமைத்தார்கள் - மழை அரித்து விட்டது"

"உடனடியாக தார் சாலை அமைத்து தருவதே தீர்வு"

"மலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை"

"ரேசன் கடைக்குக் கூட அடிவாரம் செல்ல வேண்டும்"

பாம்பு கடித்து உயிரிழந்த சங்கரின் மகள் ஷோபா, தார்ச்சாலையும், மருத்துவமனையும் அமைத்து, அடுத்த உயிரிழப்பு ஏற்படும் முன் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்...

"தார் சாலை, மருத்துவமனை அமைத்து தர வேண்டும்"

"மண் சாலை அமைத்து எந்தப் பயனும் இல்லை"

மழையில் அரித்துச் செல்லாத வகையில், தார் சாலை அமைத்து தங்கள் துயர் தீர்க்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்