மாறும் 1,000 ஆண்டு கால வரலாறு.. உலகமே ஒன்றுகூடும் மாபெரும் நிகழ்வு - முடிசூடுகிறார் 3ம் சார்லஸ்..!

Update: 2023-05-06 03:14 GMT

இந்தக் காலத்தில் அரசாட்சியா?... என கேள்வி கேட்போர் ஏராளம்... முடியாட்சி விழாக்களுக்கு முழுக்கு போட்ட ஐரோப்பிய நாடுகளும் ஏராளம்... ஆனால், நவ நாகரீக காலத்திலும் முடிசூட்டு விழாவை நடத்தி அரச அதிகாரம் கடவுளிடம் இருந்து பெறப்பட்டது என்பதை உணர்த்துகிறது பிரிட்டன்...பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய முறையில் தான் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அதிகாரத்தைக் கையில் எடுக்க உள்ளார்... கேன்டர்பரி பேராயர், மன்னர் சார்லசை புனித எண்ணையால் நனைக்க... அரசருக்குரிய செங்கோல் உள்ளிட்ட பாரம்பரிய பொருட்கள் கொடுக்கப்பட்டு, முடிசூட்டு மகுடமான செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் சார்லசின் தலையை அலங்கரிக்கும்...

அதே சமயம் அவரது மனைவி கமிலா பிரிட்டனின் ராணியாக முடிசூட்டப்படுவார்...இந்த இடத்தை மறைந்த வேல்ஸ் இளவரசி டயானா அலங்கரித்திருக்க வேண்டியது... ஆனால் காலத்தின் கட்டாயத்தால் அது நடக்காமல் போய் விட்டது... ஒருமுறை நேர்காணல் ஒன்றில், "நீங்கள் ராணியாக விரும்புகிறீர்களா?" என நிருபர் கேள்வி கேட்க... அதற்கு டயானாவோ, "நான் அரியணை ஏறும் ராணியாக அல்லாமல், மக்களின் மனங்களில் இடம்பெறும் ராணியாகவே விரும்புவதாகத்" தெரிவித்தார்...

ஆயிரம் ஆண்டுகளாக அரச குடும்ப விழாக்களைக் கண்டது இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அபே... 1066ல் இங்கு முடிசூட்டப்பட்ட முதல் மன்னரானார் வில்லியம்...1953 ஜூன் மாதம் மறைந்த 2ம் எலிசபெத் ராணியாக முடிசூடினார்... இன்னொன்று தெரியுமா?... இதுதான் முதன்முதலில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முடிசூட்டு விழா... பிரிட்டனில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் இதைக் கண்டு களித்தனர்... பிறகு அது உலகளவில் ஒளிபரப்பப்பட்டது...

ஆனால் இப்போது மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவை நாம் நமது செல்போனில் நேரலையாக கண்டு ரசிக்கலாம்... ஆர்ட்டின்களை அள்ளித் தெளிக்கலாம்... தன் தாயின் முடிசூட்டு விழா 3 மணி நேரம் நடைபெற்ற நிலையில், சார்லஸ் அவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லையாம்... பார்வையாளர்கள் எண்ணிக்கையையும் குறைத்து விட்டாராம்...

அதேபோல் விழாவுக்குப் பின் நடக்கும் ஊர்வலத்திற்கும் இதே கதை தான்... 1953ல் எலிசபெத்தும், அவரது கணவர் இளவரசர் பிலிப்சும் 8 கிலோ மீட்டர் தூரம் லண்டனை உலா வந்தனர்... அந்த தூரத்தை வெறும் 2 கிலோ மீட்டராகக் குறைத்து விட்டனர் சார்லசும் கமிலாவும்... ஜப்பான் பட்டத்து இளவசர்-இளவரசி, ஸ்பெயின் மன்னர்-ராணி, அமெரிக்க அதிபர் பைடன் மனைவி ஜில் பைடன் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்...

விழாவின் போது வேல்ஸ் இளவரசரும், அரியணையின் வாரிசுமான வில்லியம் தனது தந்தை சார்லசின் முன் மண்டியிட்டு அரச விசுவாசத்தை உறுதி அளிப்பார்...அரச பொறுப்புகளைத் துறந்த அவரது இளைய சகோதரர், இளவரசர் ஹாரி அரச சேவையில் பங்கேற்க வாய்ப்பில்லை... அவரது மனைவி மேகன் விழாவில் கலந்து கொள்ளவில்லை...சார்லஸின் சகோதரர் இளவரசர் ஆண்ட்ரூவும் இந்த விழாவில் எந்தப் பங்கையும் வகிக்க மாட்டார்... பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான அவரது நட்பு அம்பலமானதில் இருந்து ஆண்ட்ரூ அரச கடமைகளைக் கைவிட்டார்...சமீப ஆண்டுகளாக முடியாட்சிக்கான ஆதரவு குறைந்து வருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில், மக்களின் ஆதரவைக் காட்ட சார்லஸிற்கு இது ஒரு நல்வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்