யார் கெத்து என்ற போட்டியில் மோதல்... பிரபல ரவுடி கல்லால் அடித்து கொலை...
மணலில் நிறைந்து உறைந்திருக்கும் ரத்தம்...மார்க்கெட்டை கன்ட்ரோலுக்கு எடுத்த ரௌடி கூட்டம் ...
கல்லால் அடிபட்டே பிறிந்த உயிர்...குலை நடுங்க வைக்கும் கொலை பின்னணி...
சேலம் அரிசிபாளையம் ஔவை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ரெட்டி என்கிற லோகேஷ்.
ஔவை மார்க்கெட்டை ஆளும் ரௌடியாக வலம் வந்த இவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், உயிர் பயத்தால் அம்மாபேட்டைக்கு குடி பெயர்ந்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைதான லோகேஷ், சமீபத்தில் தான் பெயிலில் வீடு திரும்பி இருக்கிறார்..
சிறையிலிருந்து வெளிவந்த சில நாட்களிலேயே, பழைய பகையாளி ஒருவரை தீர்த்துக் கட்ட, அரிவாளை கையில் எடுத்த லோகேஷ், நேராக சென்ற இடம் ஔவை மார்க்கெட்.
லோகேஷ் தேடி வந்தது ரவி என்பவரை. ரவியும் அதே பகுதில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் தான். பல வருடங்களாக இருவருக்கும் இடையே நீயா நானா என்ற ஏரியா தகராறு இருந்து வந்திருக்கிறது.
பல வருடங்களாக நீண்ட அந்த பகைக்கு ஒரு முடிவு கட்ட தான் லோகேஷ் கையில் அரிவாளோடு சென்றிருக்கிறார். ரவியும் லோகேஷூம் நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். நடந்த சண்டையில் லோகேஷ், ரவியை இரண்டு மூன்று முறை வெட்டியிருக்கிறார்.
படுகாயம் அடைந்த ரவியை, மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ரவி வெட்டப்பட்டதை அறிந்த அவரது ஆட்கள் 15 பேர், உடனே சம்பவ இடத்தில் திரண்டிருக்கிறார்கள். லோகேஷ் கையில் பொருளோடு இருந்ததால் நெருங்க யோசித்தவர்கள் அருகில் அடுக்கப்பட்டு இருந்த செங்கல்லை எடுத்து சரமாரியாக எரிந்திருக்கிறார்கள்.
நடந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.லோகேஷ் உயிர் போனதை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்திருக்கின்றனர்....
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ரவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், லேகோஷ் கொலையில் தொடர்புடையவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.ஆயுதம் எடுத்தவன் அந்த ஆயுதத்தாலே சாவான் என்பார்கள். ரவுடியிசம் என்ற ஆயுதத்தை எடுத்த இரண்டு பேரின் முடிவு... இப்படித்தான் இருக்கும் என சொல்லாமல் சொல்கிறது இந்த மருத்துவமனை வளாகம்.