கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காதலுக்கு தூது போனதாக 16 வயது சிறுவனை பெண் வீட்டார் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போச்சம்பள்ளியை அடுத்த ஒட்டப்பட்டியைச் சேர்ந்த பூவரசன் என்பவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயசாந்தி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு நடந்து வந்த நிலையில், காதலுக்கு தூது போனதாக பூவரசனின் உறவினரான 16 வயது சிறுவனையும், சக்திவேல் என்பவரையும் பெண்ணின் குடும்பத்தினர் தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, மத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பூவரசனின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.