38 நிமிடத்தில் 55 செய்திகள்.. | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News |Thanthi Short News (04.06.2023)

Update: 2023-06-04 05:20 GMT

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த 290 பயணிகள் ஏற்கனவே மீட்கப்பட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக, சிறப்பு ரயில் மூலம் 137 பேர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் சென்று வரவேற்றனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கும், பிற பயணிகள் அவரவர் இருப்பிடங்களுக்கும் அழைத்து செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த எட்டு பேர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார். அவர்களுக்கு எலும்பு, கால்களில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பெரிய அளவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ரயில் விபத்து தொடர்பான தனது வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை என வேதனை தெரிவித்தார். விபத்து தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிப்பட்டுள்ளதாக கூறினார். அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பதாவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே, திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முகுந்தராயபுரம் மற்றும் லாலாபேட்டை ஊராட்சிமன்ற தலைவர்கள் இடையே கொடி ஏற்றுவது குறித்து ஏற்பட்ட தகராறில் 10 பேர் காயம் அடைந்தனர். இதை கண்டிக்கும் விதமாக, இருதரப்பினரும் தனித்தனியே சாலையில் மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார், 35க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்