16 நிமிடத்தில் 35 செய்திகள்.. | இரவு தந்தி எக்ஸ்பிரஸ்

Update: 2023-05-19 15:03 GMT

தமிழகத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வரும் 21ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிபவர்கள், காலை முன்கூட்டியே பணிகளை தொடங்கி, வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் முன் முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களை, பெற்றோர் ஊக்கப்படுத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு முதல்முறையாக அரசு பள்ளிகளில் இருந்து பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ சேரக்கூடிய மாணவர்களை கண்டறிய அவர்களுடைய பள்ளி தகவல் மேலாண்மை எண் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அன்பில் மகேஸ் கூறினார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வை 17 ஆயிரத்து 732 பேர் எழுதிய நிலையில், 17 ஆயிரத்து 294 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து 97.53 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அதேபோல் அரசு பள்ளிகளில் 7ஆயிரத்து 598 பேர் எழுதிய நிலையில்7 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சி பெற்று, 96.38 சதவீதம் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது‌. இதனை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் கல்வி அலுவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்

சென்னையில் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என நினைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அயனாவரத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில், தோல்வி அடைந்து விடுவோம் என நினைத்து நேற்று இரவு விஷம் குடித்துள்ளார். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மாணவி 271 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்