முதல் கல்யாணத்தை மறைத்து 2வது திருமணம்.. மூணும் பெண் குழந்தை..கணவன் ஆத்திரம்..

Update: 2023-07-18 13:02 GMT

தூத்துக்குடி அருகே, 3 பெண் குழந்தைகள் பெற்றதன் காரணமாக, விவாகரத்து கேட்டு கொலை மிரட்டல் விடும் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


தூத்துக்குடி அருகே சாயர்புரம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன். தனியார் காற்றாலை நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

மகாராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெபகிருபா என்ற பெண்ணை மணந்து அவரை விவகாரத்து செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மீண்டும் பெண் பார்க்கும் படலத்தை குடும்பத்துடன் அரங்கேற்றிய மகாராஜனுக்கு, கடந்த 2017-ம் ஆண்டு, நடுவகுறிச்சியை சேர்ந்த அண்ணமணி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

ஆனால், முதல் மனைவியை விவாகரத்து செய்ததை மகாராஜன் பெண் வீட்டாரிடம் கூறாமல், மறைத்து திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு மகாராஜன் - அண்ணமணி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டும் பெண் குழந்தையாக பிறந்ததால், அண்ணமணியை மகாராஜனும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், மீண்டும் 3வதாக அண்ணமணி கருத்தரித்தபோது, கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கணவன் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், கணவன் வீட்டிலிருந்து வெளியேறி தனது தாய் வீட்டில் தங்கி இருந்துள்ளார் அண்ணமணி... அதன் பிறகு 2 மாதங்கள் கழித்து அவருக்கு 3வதாகவும் பெண் குழந்தையே பிறந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மகராஜன், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், ஆண் வாரிசு இல்லாத காரணத்தால், தனது மகனுக்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்போகிறோம் எனக்கூறி, கணவன் உட்பட அவரது குடும்பத்தினர் விவாகரத்து கேட்டு அண்ணமணிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் பயந்துபோன அண்ணமணி, தனது 3 பெண் குழந்தைகளுடன் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு சென்று, கணவன் மீது புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், தனது கணவர் விவாகரத்து கேட்டு கொலை மிரட்டல் விடுவதாகவும், முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தெரிவித்துள்ளார்.

"அத்தை மற்றும் உறவினர்களும் மிரட்டுகின்றனர்"

"ஆண் வாரிசு இல்லை என்பதால் விவாகரத்து கேட்கின்றனர்"

"3 பெண் குழந்தைகளுடன் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுகிறேன்"

கணவனின் ஈவு இரக்கமற்ற செயலால், ஏதுமறியா குழந்தைகள் தாயுடன் ஏக்கத்துடன் நிற்கும் காட்சி மனதை உலுக்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்