"108 ஆம்புலன்சில் உரிய வசதி இல்லை"... 6 வயது மகனை இழந்து வாடும் தந்தை - மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு
ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளி வெள்ளையன் என்பவரின் 6 வயது மகன் முத்து வெங்கடேசுக்கு, கடந்த 20ம் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது வைரஸ் காய்ச்சல் என கூறப்பட்டது. இதையடுத்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டதாக கூறினர். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், ஆம்புலன்சில் உரிய முறையில் ஆக்சிஜன் வசதி இல்லை எனவும், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுவனின் தந்தை வெள்ளையன் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார்.