ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, மெகா ஊழல் செய்த பெங்களூரு தாசில்தாரை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள கே.ஆர்.புரம் தாசில்தாராக இருப்பவர் அஜித் ராய். இவர் மீது ஊழல் புகார் வந்த நிலையில், அஜித் ராய்க்கு சொந்தமான 11 இடங்களில், 50க்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அரசு அதிகாரியான அஜித் ராயிடம், மலைக்க வைக்கும் விதமாக, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 கார்கள், தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 ஜீப்கள், இரண்டரை கோடி மதிப்பில் சொகுசு கார், முறைகேடாக சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், 40 லட்சம் ரூபாய் பணம், 700 கிராம் தங்க நகைகள் உட்பட சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த பொருட்கள், தேவனஹள்ளியில் 96 ஏக்கர் விவசாய நிலம், 40 ஏக்கரில் பண்ணை வீடு என 136 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் ஆகியவற்றை தாசில்தார் அஜித்ராய் முறைகேடான பணத்தில் வாங்கி குவித்தது அதிகாரிகளை திகைக்க வைத்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தாசில்தார் அஜித் ராயை, லோக் ஆயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.