பழங்குடி அந்தஸ்து கோரி ரயில் மறியல்..குர்மி சமூக மக்கள் போராட்டம் | Jharkand | Protest
ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு இந்திய மாநிலங்களில் குர்மி சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்து வரும் தங்களை, பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தாங்கள் பேசி வரும் குர்மலி மொழியையும் அரசியலமைப்பின் 8ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராஞ்சியில் உள்ள முரி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, குர்மி சமூக மக்கள் ஜார்க்கண்டில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் ரயில் மறியலில் ஈடுபட்டதால், 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 47 ரயில்கள் திருப்பி விடப்பட்டன. பாதுகாப்பு கருதி 3 மாநிலங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.