ஐ.எஸ். அமைப்பின் தலைவர் வேட்டை... - பயங்கரவாதி பதுங்கியிருந்த வீட்டில் தாக்குதல்
சிரியாவில் அமெரிக்க சிறப்பு படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் குரேஷி கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு கொடூரமான தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம், சிரியா, ஈராக்கை கைப்பற்ற போராடியது. அங்கு பயங்கரவாத அமைப்பு முன்னேறிய நிலையில் அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின் படைகள், பதிலடி தாக்குதலை நடத்தின. நீண்ட சண்டைக்கு பின்னர் 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தோற்கடிக்கப்பட்டது.
சிரியாவில் அமெரிக்க படைகள் தேடுதல் வேட்டை நடத்திய போது, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக இருந்த அபுபக்கர் அல்-பாக்தாதி, உடலில் பொருத்தியிருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அல்-பாக்தாதி இறந்த பின்னர், அந்த இயக்கத்தின் தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹாஸ்மி அல் குரேஷி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
போரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டாலும், வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் அத்மாக் பகுதியில் அமெரிக்க சிறப்பு படை அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. அப்போது வீட்டில் பதுங்கியிருந்த அல்-குரேஷி, தானே வெடிகுண்டுகளை
வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டதோடு, தனது குடும்பத்தினரையும் கொலை செய்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க படைகள் பாதுகாப்பாக திரும்பியதாகவும், அமெரிக்க படைகளின் திறமைக்கும், வீரத்திற்கும் தலை வணங்குவதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.