வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் - அதிபரின் தங்கைக்கு முக்கிய பதவி
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தேசிய நிர்வாக குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தேசிய நிர்வாக குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சோசியலிச நாடான வட கொரியாவில் எதிர்கட்சிகள், முறையான நாடாளுமன்ற தேர்தல்கள் எதுவும் கிடையாது. நாடாளுமன்ற தேர்தல்களில் தொகுதிக்கு ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் அனுமதிக்கப்படுவார். கொரியா தொழிலாளர் கட்சியின் ஆட்சி அங்கு கடந்த 70 ஆண்டுகளாக தொடர்கிறது. 37 வயதான கிம் ஜாங் உன், 2011 முதல் வட கொரியாவின் அதிபராகவும், கொரியா தொழிலாளர்கள் கட்சியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இதற்கு முன்பு இவரின் தந்தையும், பாட்டனாரும் இந்த பதவிகளில் இருந்தனர். வட கொரிய அதிபருக்கு ஆலோசனை வழங்க, சக்தி வாய்ந்த தேசிய நிர்வாக குழு உள்ளது. இந்த குழுவின் உறுப்பினர்களாக இருந்த ஒன்பது பேரை கிம் ஜாங் உன் ஒட்டு மொத்தமாக பதவி நீக்கம் செய்து விட்டு, எட்டு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளார். கிம் ஜாங் உன்னின் தங்கையான கிம் யோ ஜாங், புதிய உறுப்பினர்களில் ஒருவர் ஆவார். 34 வயதான கிம் யோ ஜாங், கொரியா தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டியின் துணை இயக்குனராக இருந்த போது, அமெரிக்காவையும், தென் கொரியாவையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். தேசிய நிர்வாக குழுவில் உள்ள ஒரே பெண் உறுப்பினர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.