ரஷ்ய பல்கலை.யில் துப்பாக்கி சூடு - 8 மாணவர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவில் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு இந்திய மாணவர்கள் பத்திரமாக உள்ளனர் என தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2021-09-21 08:56 GMT
ரஷ்யாவின் உரல் பகுதியில் உள்ளது பெர்ம் பல்கலைக்கழகம்.

பல்கலைக்கழகத்தில் திங்கள் கிழமை வழக்கம்போல் காலை வகுப்புகள் தொடங்கி நடைபெற்ற நிலையில், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் வளாகத்திற்குள் நுழைந்து உள்ளார்.

கருப்பு நிற உடை, ரைபிள்  துப்பாக்கியுடன் நுழைந்தவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியுள்ளார். இதனை பார்த்த பிற மாணவர்களும், ஆசிரியர்களும் அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

பல மாணவர்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள முதல் மாடியிலிருக்கும் வகுப்பறையிலிருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து அழுதவாறு ஓடினர்.

இதற்கிடையே தகவலறிந்துவந்த காவல்துறையினர், துப்பாக்கி சூடு நடத்தி, மர்ம நபரை மடக்கி பிடித்துள்ளனர்.

மர்மநபர் கண்மூடித்தனமாக நடத்திய இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. ரஷ்யாவிலும் சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளில் துப்பாக்கி சூடு நடக்கும் சம்பவம் அவ்வப்போது காணப்படுகிறது.

தற்போது பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அதிபர் புதின், நாட்டில் துப்பாக்கி விற்பனை மற்றும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வழங்குவதில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே அங்கிருக்கும் இந்திய மருத்துவ மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்