தலிபான்களிடம் அடிபணியாத ஒரே மாகாணம் - தொடர்ந்து தலிபான்களுக்கு எதிராக போராட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அடிபணியாமல் எதிர்த்து போராடும் ஒரே மாகாணத்தின் வரலாற்றையும், தற்போதைய நிலையையும் விளக்கும் ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

Update: 2021-08-24 12:03 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தடம் பதிக்கமுடியாத மாகாணமா என்றால் சற்று ஆச்சர்யத்துடன் உற்று நோக்க  தோன்றும்.ஆனால், அப்படியொரு மாகாணம் இருக்க தான் செய்கிறது. அதுதான் பஞ்சஷீர் மாகாணம். 
பெர்ஷிய மொழியில் பஞ்சஷீர் என்ற பெயரின் பொருள் ஐந்து சிங்கங்கள்... அந்த பெயருக்கு ஏற்றால் போல தலிபான்களை எதிர்த்து சிங்கமாக கர்ஜிக்கிறது, பஞ்சஷீர்...ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பஞ்சஷீர் மாகாணம். சுற்றிலும் இயற்கையாகவே, இந்து குஷ் மலைத் தொடரை பாதுகாப்பு கோட்டையாக கொண்ட  இந்த பள்ளத்தாக்கு, ஆப்கானிஸ்தானில் உள்ள வளமான பூமியும் கூட.ஆப்கானிஸ்தானில்1980-களில் சோவியத் படையெடுப்பின் போதும் இந்த மாகாணம் வீழவில்லை. 1996 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய  போதும், பஞ்சஷீர் மாகாணத்தை நெருங்க முடியவில்லை.
இந்த பள்ளத்தாக்கு மட்டும் சுதந்திரக்காற்றை சுவாசிக்க காரணம் 1989-ல் சோவியத் படைகள் வெளியேறிய பின்னர் ஆப்கான் இடைக்கால அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அகமத் ஷா மசூத் ஆவார்.சோவியத் படைகள் வெளியேற போது , காபூலை நோக்கி வந்த தலிபான்களை விரட்டியவர், மசூத். அப்போது பாகிஸ்தான் ராணுவம் தலிபான்களுக்கு உதவி செய்ததால் அவர்களால் காபூலை கைப்பற்ற முடிந்தது.  இதனையடுத்து பஞ்சஷீர் மாகாணம் சென்ற மசூத்,  தலிபான்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட வடக்கு கூட்டணிக்கு தலைமை வகித்திருந்தார்.  ஈரான், இந்தியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தானின் ஆதரவை கொண்டிருந்த வடக்கு கூட்டணி, தலிபான்கள் முழு நாட்டையும் கைப்பற்ற விடாமல் தடுத்தது.பஞ்சஷீர் மாகாணத்தில் தன்னை நம்பியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, கல்வி, மருத்துவம், பாதுகாப்பு என நிர்வாகத்தில் மாகாணத்தை தன்னிறைவு அடைய செய்தார் அகமத் ஷா மசூத். தலிபான்கள் மக்களை தடுக்கிறார்கள், தவறான கொள்கைகளை பரப்புகிறார்கள் என தொடர்ந்து பிரசாரம் செய்த அவர், அல்-கொய்தா, தலிபான்களால் தொடரும் ஆபத்தை தொடர்ந்து சுட்டிக்காட்டினார்.இந்தநிலையில் தான் கடந்த 2001 செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்பாக, அல்-கொய்தா தீவிரவாதிகள், மசூத்தை  கொன்றனர்.தற்போது அவருடைய அடிச்சுவடை பின்பற்றும் அவரது மகன், அகமத் மசூத், பஞ்சஷீர் மாகாணத்தை நிர்வாகம் செய்கிறார். 
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில், இந்த நாள் வரக்கூடும் என தெரியும் என்றும் தாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார் அவர்.தலிபான்கள் காபூலை கைப்பற்றுவதற்கு இடையே, அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறி சூழலில்,துணை அதிபரான அம்ருல்லா சலே, பஞ்சஷீர் சென்று உள்ளார். இதேபோன்று தலிபான்களை விரும்பாத ராணுவ வீரர்கள், அதிகாரிகளும் அங்கு ஒருங்கிணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை கைப்பற்றியிருக்கும் தலிபான்கள், பஞ்சஷீர் மாகாணத்தை சுற்றிலும் மையமிட்டுள்ளனர். இப்போதைய சூழலில் சர்வதேச நாடுகளின் உதவியின்றி தலிபான்களுக்கு எதிரான பஞ்சஷீர் மாகாணத்தின் போராட்டம் வெற்றியடைவதற்கு சாத்தியம் குறைவு என்பதே சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்