"டுவிட்டர் மீது டிரம்ப் பாய்ச்சல் - விரைவில் சொந்த சமூக வலைதளம்
புதியதாக சமூக வலைதளம் ஒன்றை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரம் வெடித்ததை அடுத்து டிரம்பின் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் தீவிரமாக கண்காணித்தது. பின்னர், வன்முறையை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக அவருடைய தனிப்பட்ட கணக்கையும், அமெரிக்க அதிபருக்கான கணக்கையும் முடக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்திருக்கும் டிரம்ப், டுவிட்டர் நிறுவனம் தன்னுடைய பேச்சு சுதந்திரத்தை முடக்குகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார். தன்னை பேசாமல் அமைதியாக இருக்க செய்யும் முயற்சியாக கணக்கை நீக்கியிருக்கிறது என விமர்சனம் செய்திருக்கும் டிரம்ப், டுவிட்டர் ஜனநாயகக் கட்சி மற்றும் தீவிர இடதுசாரிகளுடன் கைகோர்த்துள்ளது எனவும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், வரும் காலங்காலில் தனது சொந்த கருத்துகளை சுதந்திரமாக பதிவு செய்வதற்காக சொந்தமாகவே சமூக வலைதளத்தை உருவாக்குவது குறித்து ஆராயப்போவதாக கூறியிருந்தார். இறுதியில் டிரம்பின் இந்த டுவிட்களும் நீக்கப்பட்டுவிட்டது.