அமெரிக்கா சென்றார், பிரதமர் மோடி : ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அமெரிக்காவுக்கு ஏழு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஐ.நா., பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டம், 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி, ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் உரை என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள 'என்.ஆர்.ஜி., கால்பந்து மைதானத்தில்' ஹவ்டி மோடி' நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது. 'கனவுகளை பகிருங்கள்; ஒளிமயமான எதிர்காலம்' என்ற தலைப்பில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் செய்த 'ஏர் இந்தியா' விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போது, மோடியை ஜெர்மனிக்கான இந்திய தூதர் முக்தா தோமர் மற்றும் தூதரக அதிகாரி பிரதீபா பர்கர் ஆகியோர் வரவேற்றனர். பிராங்பர்ட்டில் விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, ஹூஸ்டன் நகருக்கு மோடி சென்றார். அங்கு விமான நிலையத்தில் தூதரக அதிகாரிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
எண்ணெய் நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்ற வட்டமேசை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.