சென்னை-நெல்லை சீறிப்பாய்ந்த வந்தே பாரத்.."652 கி.மீட்டரை இவ்வளவு சீக்கிரமாக கடக்கிறதா?"

Update: 2023-09-21 09:20 GMT

சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது...சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை வருகிற 24ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும், இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் நின்று செல்லும் எனவும் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வந்தே பாரத் ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் மற்ற 6 நாட்களும் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக விழுப்புரத்துக்கு பகல் 12 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் 12.02 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரயில் மதியம் 1.50 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தை மாலை 4.35 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் விழுப்புரத்தில் இருந்து மாலை 4.37 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது. மணிக்கு 83.30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த வந்தே பாரத் ரயிலானது, சென்னை- திருநெல்வேலி இடையேயான 652.49 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கும். இந்த ரயில் இன்று சென்னையில் இருந்து நெல்லைக்கு சோதனை ஓட்டமாக விடப்பட்டது... இதையடுத்து விழுப்புரம் வந்த வந்தே பாரத் ரயில் முன்பு ஏராளமான பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்..

Tags:    

மேலும் செய்திகள்