சாலை விபத்தில் உயிரிழந்த கணவர்..! அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த மனைவி.. யோசிக்காமல் போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்
கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் கணவனுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு பணமின்றி தவித்த கேரள பெண்ணுக்கு, தமிழக காவல்துறையினர் சொந்த பணத்தில் உதவி செய்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ராஜூ, கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் காரில் சென்ற போது சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது உடலை பெற்று செல்ல மனைவி ஸ்ரீதேவி, கேரளாவில் இருந்து வந்தார். ஸ்ரீதேவியிடம் விபத்தின் போது கைப்பற்றப்பட்ட ராஜூவின் 59 ஆயிரம் ரூபாய் பணம் ஒப்படைக்கப்பட்டது. மூன்று பிள்ளைகளுடன் வறுமையில் இருக்கும் ஸ்ரீதேவியால் இந்த பணத்தை கொண்டு, கணவரின் உடலை கேரளாவிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், போலீசாரிடம் இங்கேயே கணவனின் உடலை அடக்கம் செய்ய உதவுமாறு கேட்டுள்ளார். இதனால் மனமுருகிய போலீசார், தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து, ராஜூவின் உடலை அடக்கம் செய்ய அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர்.