திருவள்ளூர் மாவட்டம், மணவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தற்காலிக கணித ஆசிரியரை பெற்றோர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றும் பாஸ்கர் என்பவர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் உறவினர்களுடன் திரண்டு வந்து, ஆசிரியர் பாஸ்கரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை பிடித்து, திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, காவல் ஆய்வாளர் மலர், மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தி, நடந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார்.
மாணவிகளின் பெற்றோர் வழக்கு கொடுக்க முன்வராத நிலையில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களிடம் புகாரை பெற்று கணித ஆசிரியர் பாஸ்கர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.