தூத்துக்குடியில், அரசு மற்றும் தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் சுமார் 36 கோடி ரூபாய் ஏமாற்றிய புகாரில், மோசடி நபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த பாலகுமரேசன் என்பவர், தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்த தொண்டு நிறுவனம் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்காக ஆசிரியர் பணியிடங்கள் தேவை என பாலகுமரேசன் விளம்பரம் செய்து, ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நிரந்தர வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் ஆயிரத்து 351 பேரிடம் தலா 5 லட்சம் ரூபாய் என சுமார் 36 கோடியே 13 லட்சம் ரூபாயை பாலகுமரேசன் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், கூறியபடி வேலை கிடைக்காததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆசிரியர்கள், இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும், பாலகுமாரேசனை கைது செய்யக்கோரி தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த பாலகுமரேசனை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்