தை அமாவாசை தினமான இன்று நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள், சிறப்பு வழிபாடு நடத்தினர்.தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் ஈரோடு பவானி கூடுதுறை காவிரியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி கடற்கரையில் மூதாதையர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து கோயிலில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
குற்றாலத்தில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு எள், அரிசி இரைத்து தர்ப்பணம் தந்தனர். அருவியில் நீர்வரத்து குறைவாக இருப்பதால் நீண்ட நேரம் காத்திருந்து நீராடினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் காவிரி சங்கமத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடினர்.