அரசு பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலேயே தேவையான சமையலறை, சமையல் பொருட்களை வைப்பதற்கான அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும்,கேட்டுக் கொண்டுள்ளார். இதன்மூலம், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் இரண்டரை லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.