தாம்பரம் கமிஷனர் ஆபிசுக்கு வந்த சோதனை.. "இடம் மாறுதா..?" அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் கூட்டாக தாக்கல் செய்த மனுவில், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்காக, சோழிங்கநல்லூரில் தங்களுக்கு சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தை குத்தகைக்கு வழங்கியதாகக் கூறியுள்ளனர். மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்ணயித்து, 2022ம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், ஒப்பந்தம் இன்றி கட்டிடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்பதால், அதனை காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மார்ச் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், தாம்பரம் காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.