பெண்கள் கழுத்துக்கு ஸ்கெட்ச்..! வலிமை பட பாணியில் நண்பர்கள் வேட்டை.. குறும்படம் காட்டிய சிசிடிவி

Update: 2023-11-03 07:31 GMT
  • உன் நண்பன் யார் என்று சொல் - நீ யார் என்று சொல்கிறேன் என்ற பழமொழிக்கு ஏற்ப, உல்லாச வாழ்க்கை வாழ, குறுக்கு வழியில் பணத்தை தேடிய இணைபிரியா இரு பள்ளி நண்பர்கள் சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
  • சென்னை மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பகல் நேரங்களில், நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
  • இதுதொடர்பாக புகார்கள் எழ, சம்பவம் நடந்த இடங்களில் உள்ள 70க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
  • சிசிடிவி காட்சிகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், தீவிர விசாரணைக்குப் பின் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.
  • அந்த வகையில், மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • கைதான இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குடியாத்தம் பகுதியை சேர்ந்த மனோஜூம், விக்னேஷூம் ஒன்றாகவே 12ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து வந்துள்ளனர். மனோஜின் நடவடிக்கை சரி இல்லாததால், அவனிடம் கூட்டு சேர்வதை கண்டித்த விக்னேஷின் பெற்றோர், தங்களது மகனை வேலூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
  • ஆனாலும் நண்பனை பிரிய மனமில்லாததால், கூடா நட்பு மீண்டும் இணைந்துள்ளது. பெற்றோரை விட்டு பிரிந்து மதுரவாயலுக்கு வந்த இருவரும், அங்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்...
  • உல்லாச வாழ்க்கை வாழ ஆசைப்பட்டதுடன், ரீல்ஸ் எடுக்கும் ஆர்வம் கொண்ட இவர்களுக்கு, குறும்படங்கள் எடுக்கவும் ஆசை வந்துள்ளது. இந்த இரண்டிற்கும் தடையாக இருந்தது பணம் மட்டுமே... அதனை எப்படி ஈட்டுவது என நினைத்தபோது தான், இருவரின் சிந்தனையில் குதித்துள்ளது ஒரு திரைப்படத்தின் காட்சி...
  • நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படத்தில், போலீசுக்கு சவால் விடும் வகையில், மோட்டார் சைக்கிளில் சென்று இளைஞர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு, உல்லாசமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதனை பார்த்துவிட்டு மனோஜூம், விக்னேஷூ சேர்ந்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
  • இதற்காக முதலில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடிய இவர்கள், போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக, அந்த வாகனத்தின் பதிவு எண்ணை மாற்றியுள்ளனர்.
  • அதன் பிறகு, பகல் நேரங்களில் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் சென்று, தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் கிடைத்த பணத்தை வைத்து உல்லாசமாக இருந்து வந்ததும், குறும்படம் எடுப்பதற்காக பணத்தை சிறிது சேமித்து வைத்ததும் தெரியவந்தது.
  • கைதான இருவரையும் விசாரணைக்குப் பிறகு போலீசார் சிறையில் அடைத்தனர். கூடா நட்பு கேடாய் முடியும் என்ற உதாரணத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த சம்பவம்...
Tags:    

மேலும் செய்திகள்