கட்டு போட்ட கையோடு சென்னை கோர்ட்டுக்கு வந்த சவுக்கு சங்கர்..நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு

Update: 2024-05-11 03:41 GMT

கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர், 3 வழக்குகள் தொடர்பாக, சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர், தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, கிளாம்பாக்கம் போலி ஆவணம் தொடர்பாக, சிஎம்டிஏ அதிகாரி பாலமுருகன், ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், சவுக்கு சங்கர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக, கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். நீதிபதி கோதண்டராஜ் முன்னிலையில், காயத்துடன் கை கட்டப்பட்ட நிலையிலேயே சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பெண் பத்திரிகையாளர் சந்தியா மற்றும் வீரலட்சுமி கொடுத்த புகாரில், சவுக்கு சங்கரை நீதிமன்றக் காவலில் வைக்க முகாந்திரம் இல்லை என்று நீதிபதி கூறினார். அதேசமயம், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய போலி ஆவண வழக்கில், சவுக்கு சங்கரை வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 3 மணி நேர விசாரணைக்குப் பிறகு, பலத்த பாதுகாப்புடன் அவர் கோவைக்கு அழைத்துச் செல்லபட்டார். முன்னதாக, சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் துடைப்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்