சாம்சங் போராட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சுங்குவார் சத்திரத்தில் கடந்த சில வாரங்களாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட பந்தலை இரவோடு இரவாக அகற்றியதுடன், போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சாம்சங் நிறுவனத்திடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமென, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் பெரு நிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து, தேடி தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டுவது கண்டனத்துக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.