காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் பகுதியில், சாம்சங் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தின் 19ஆம் நாளில் (செப்.27) நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, வரும் 30ஆம் தேதி சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாநில செயலாளர் முத்துகுமார் அறிவித்தார். இதேபோல், அக்டோபர் 2ஆம் தேதி குடும்பத்தினருடன் சாம்சங் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார்கள் என்றும், அக்டோபர் 5ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி குடும்பத்தினருடன் தொழிலாளர்கள் பேரணி செல்வார்கள் என்றும் அவர் அறிவித்தார். சமூக நீதி அடிப்படையில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின், சாம்சங் தொழிலாளர்களுக்கு சமநீதியை வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.