பிணம் மயானம் போவதற்குள்..தூக்கி செல்வோரை கழுத்தோடு பிடித்து இழுக்கும் பயங்கரம்

Update: 2024-10-29 09:00 GMT

சமயபுரத்தில் அதிர்ச்சி..பிணம் மயானம் போவதற்குள்..தூக்கி செல்வோரை கழுத்தோடு பிடித்து இழுக்கும் பயங்கரம்

காலம் காலமாக இறந்தவர்களின் உடலை கழுத்தளவு ஓடும் ஆற்றின் குறுக்கே சுமந்தபடி, நீந்திச் சென்று அடக்கம் செய்யும் ஒரு கிராமத்தினர் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து பார்க்கலாம்.. விரிவாக...

சமயபுரம் அருகே உள்ள மருதூர் நேரு நகரில் தான், இந்த சம்பவம் பல ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது..

300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் இந்த பகுதியில், யாரேனும் உயிரிழந்தால், அவர்களை நல்லடக்கம் செய்வதற்கு ஊருக்கு அருகே உள்ள "உப்பாறு" என்ற ஆற்றைக் கடந்து செல்லவேண்டிய சூழலே உள்ளது..

வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, இந்த உப்பாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது..

இந்த நிலையில் தான், இந்த கிராமத்தில் உடல்நலக் குறைவால் அருணாச்சலம் என்ற மூதாட்டி காலமானார். தொடர்ந்து, மூதாட்டியின் உடலை அடக்கம் செல்வதற்காக, அவரது உறவினர்கள் கழுத்தளவு ஓடிய வெள்ளத்தில் மூதாட்டியின் உடலை சுமந்தவாறு நீந்திச் சென்ற சம்பவம் மனதை ரணமாக்கியுள்ளது..

உறவுகளை இழந்த சோகம், ஒரு பக்கம்.. இறந்தவரின் உடலை இப்படி தூக்கி செல்லும் போது எதிர்கொள்ளும் ஆபத்துகள் மறுபக்கம் என இந்த கிராமத்தினர் ஒவ்வொரு முறையும் அனுபவித்து வரும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல..

இதனால் தேள், பாம்பு உள்ளிட்டவைகளின் தாக்குதலுக்கும் ஆளாகி வருகின்றனர், இப்பகுதி மக்கள்..

அதேபோல, ஆற்றின் வேகத்தில் அவ்வப்போது சடலமும், அதை சுமந்தபடி நீந்திச் செல்வோரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லக்கூடிய அபாயமான பயணமே தொடர்கதையாகி வருகிறது...


தங்களது முன்னோர் காலத்தில் இருந்தே, மயானத்திற்கு இப்படித்தான் செல்வதாகவும், இதற்காக எத்தனையோ முறை, பல அதிகாரிகளுக்கும் மனுக்கள் அளித்தும் தங்களது கோரிக்கையும், தாங்கள் படும் துயரங்களும் அரசின் பார்வைக்கு எட்டியதாக தெரியவில்லை என இங்கு உள்ள பெண்கள் விரக்தியில் புலம்புகின்றனர்..

தேர்தல் நேரத்தில் வரும் வாக்காளர்கள், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு, கண்டும் காணாமல் இருப்பதாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்..

ஆகவே, இங்கு மக்கள் படும் துயரத்தைப் போக்கும் விதமாக உப்பாற்றின் குறுக்கே பாலம் கட்டித் தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்