துளி ரத்தம்..சிறு காயம் கூட இல்லை..கதவை திறந்த நொடி பிரிந்த உயிர்கள்- இப்படி எல்லாம் சாவு வருமா?

Update: 2024-06-12 08:17 GMT

புதுச்சேரியில் சினிமாவை மிஞ்சும் கோரச் சம்பவம் ஒன்று அரங்கேறி, 15 வயது சிறுமி உட்பட மூவரின் உயிர் பறிபோயிருக்கிறது. மனத பதற வைக்கும் இந்த சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்தும் பார்க்கலாம் விரிவாக....

போலீசார் முதல் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் தொடங்கி முதலைமைச்சரே நேரில் வந்து பார்வையிடும் அளவுக்கு நிலைமை கைமீறி... பெரும் விபரீதம் அரங்கேறி இருக்கிறது புதுச்சேரியில்...

தங்கள் வீட்டு கழிவறையை பயன்படுத்தி, 15 வயது சிறுமி உட்பட மூவர்... விஷ வாயு தாக்கி கழிவறையிலே மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது புதுச்சேரியை உலுக்கி இருக்கிறது...

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள புதுநகரில் நிகழ்ந்த இந்த கோர சம்பவத்தில், 72 வயது மூதாட்டியான செந்தாமரை... தன் வீட்டு கழிவறையை பயன்படுத்தியபோது விஷ வாயு தாக்கி உயிரிழந்ததும், அவரை காப்பாற்றச் சென்ற மகளும், பேத்தியும் அடுத்தடுத்து விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்ததும் திடுக்கிடச் செய்திருக்கிறது...

இதில், மூதாட்டியின் மகளான காமாட்சி மருத்துவமனை செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்...

மூதாட்டியின் பேத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவியான 15 வயது சிறுமி செல்வராணி என்பவரும் இதே போல் தன் வீட்டு கழிவறையை பயன்படுத்தியபோது விஷ வாயு தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவர ரெட்டியார்பாளையம் பகுதிமக்கள் அதிர்ந்து போயினர்...

மேலும் ஒருவர் விஷவாயு தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விவகாரம் சூடுபிடித்து புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

மனதை பதற வைக்கும் இந்த சம்பவத்தில், ரெட்டியார் பாளையம் அருகேயுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்டது... பாதாள சாக்கடை வழியாக விஷ வாயுக்கள் கசிந்து அப்பகுதிகளில் உள்ள வீட்டு கழிவறைகளில் வெளியேறியதாக வெளியான தகவல் மக்களை பீதியடைய செய்திருக்கிறது...

உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், புதுநகர் பகுதி மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறும் படி அறிவுறுத்தி பகுதி முழுவதும் போலீசார் வலம் வந்தது பரபரப்பை மேலும் கூட்டியது...

சம்பவத்தின் தாக்கம் அறிந்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயனன் உள்ளிட்டோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.. அப்போது, உயிரிழந்த மூன்று பேருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும், சம்பவம் குறித்து துறை ரீதியலான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிறுவனம்... கடந்த மாதம் வரை ஒப்பந்த அடிப்படையில் லீசுக்கு விடப்பட்டிருந்ததும், அந்த ஒப்பந்தம் முடிந்து கடந்த சில நாட்களாக புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் இருந்ததும் தெரியவந்துள்ளது...

கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறால்... ஒவ்வொரு வீடுகளுக்கும் கொடுக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய் இணைப்பு மூலம் கழிவறைகளில் விஷ வாயு கசிந்து 3 உயிரிழந்திருப்பதாக கூறப்படும் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்