10 நாளில் 8 கொலைகள்...எங்கு திரும்பினாலும் வீசும் ரத்த வாடை...தூங்கா நகரை துரத்தும் மரண ஓலம்
10 நாளில் அடுத்தடுத்து 8 கொலைகள்
எங்கு திரும்பினாலும் வீசும் ரத்த வாடை
தூங்கா நகரை துரத்தும் மரண ஓலம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலையால் மதுரை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் நிலையில், கடந்த 10 நாள்களில் மதுரையில் 8 கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது....
தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த மூதாட்டி மருத்துவமனைக்குள் புகுந்து வெட்டி கொல்லப்பட்டது தொடங்கி... அடுத்தடுத்து நிகழ்ந்த கொலைகளால், கோயில் நகரமான மதுரையை பதற்றம் தொற்றி இருக்கிறது..
கடந்த இரு தினங்களுக்கு முன்... நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான பாலசுப்பிரமணியன், மதுரை தல்லாக்குளம் பகுதியில் வழக்கம் போல் காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்....
சரியாக, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே அவர் சென்றபோது, திடீரென சுற்றி வளைத்த கும்பல், பாலசுப்பிரமணியனை வெட்டி சரித்தது மதுரையை ஸ்தம்பிக்கச் செய்தது...
உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார்... குடும்ப தகராறு மற்றும் சொத்து பிரச்சனையில் தனது அண்ணனாலையே பாலசுப்பிரமணியன் கொல்லப்பட்டதாக கூறி, பாலசுப்பிரமணியத்தின் சகோதரர் மகாலிங்கம், அவரது மகன் அழகுவிஜய் உட்பட 6 பேரை கைது செய்தது பரபரப்பை மேலும் கூட்டியது..
இந்நிலையில், கடந்த 10 நாட்களில் 4 பெண்கள் உட்பட 8 பேர் மதுரையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையினரை நிம்மதி இழக்க வைத்து இருக்கிறது...
கடந்த 8 ம் தேதி திருமங்கலம் வாகைக்குளம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காசம்மாளை, வீடு புகுந்து கொன்ற கும்பல் 65 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றிருந்தனர்...
அதனை தொடந்து விரகனூர் பகுதியில் கலைச்செல்வி, மேலூர் அருகே துடப்பம் விற்று வந்த வயதான தம்பதி பாப்புரம்மாள் -அழகு, பின் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் வைத்தே கொல்லப்பட்ட தூய்மை பணியாளரான மூதாட்டி முத்துலெட்சுமி என அடுத்தடுத்த இந்த கொலைகள் மக்களை அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியது...
இதனிடையே, மதுபோதையில் தினமும் தன்னை சித்ரவதை செய்து வந்த கணவர் கார்த்திக்கை, மனைவி கனிமொழி சப்பாத்தி கல்லால் அடித்து கொன்றது, ஆட்டோ சங்கத்தில் புதிதாக மேலும் ஒரு ஆட்டோ ஓட்டுநரை சேர்க்க முயன்றதில் தகராறாகி, அதலைப்பகுதி ஆட்டோ சங்கத் தலைவர் ஜோதிபாசு கொல்லப்பட்டது என பட்டியல் நீண்டு வருகிறது...
மொத்தமாக ஐந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் கைதான நிலையில், மீதமுள்ள மூன்று கொலையை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...
இதுபோன்ற அடுத்தடுத்த கொலை சம்பவங்கள், தூங்க நகர வாசிகளை தூங்க விடாமல் செய்யும் நிலையில், இவையனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் படி விரைவு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் போலீசாரை வலியுறுத்தி வருகின்றனர்...