சென்னை புழல் சிறையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய கைதி இசுபா அகஸ்டினிடம் இருந்து 2 செல்போன், சிம்கார்டுகள், ஏர்பட்ஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிறை துணை ஜெயிலர் சாந்தகுமார், சிறைக்குள் ரோந்து சென்றபோது நைஜீரிய கைதி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவதூறாக பேசியுள்ளார். மேலும், தான் கையில் வைத்திருந்த உணவு சாப்பிடும் தட்டால் துணை ஜெயிலரை தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த சிறை காவலர்கள், நைஜீரிய கைதியை தடுத்து சிறைக்குள் அடைத்தனர். கையில் காயமடைந்த சாந்தகுமார், சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், நைஜீரிய கைதி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.