Free.! Free.! ஸ்டேட்டசை 100 பேர் பார்த்தால் இலவச ப்ளூடூத் ஹெட்போன்... மயிலாடுதுறையில் பரபரப்பு
Free.! Free.! வாட்ஸ்அப் ஸ்டேட்டசை 100 பேர் பார்த்தால் இலவச ப்ளூடூத் ஹெட்போன்.. ஆதாரத்துடன் குவிந்த இளைஞர் கூட்டம் - அல்வா கொடுத்த தனியார் நிறுவனம்.. மயிலாடுதுறையில் பரபரப்பு
புதிய நிறுவனத்தின் விளம்பரத்தை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்தால் இலவசமாக ஹெட்போன் தருவதாக கூறி ஏமாற்றிய நிறுவனத்தை கண்டித்து இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை காமராஜர் சாலையில் தனியார் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் உதிரிபாகங்கள் விற்பனையக திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் விதமாக திறப்பு விழா விளம்பரத்தை whatsapp ஸ்டேட்டஸ் ஆக வைத்து, அதை 100 பேர் பார்த்தால் ரூபாய் 2 ஆயிரத்து 799 மதிப்பிலான ப்ளூடூத் ஹெட்போன் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சலுகை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வரையில் மட்டுமே என்று நிறுவனத்தினர் பதிவிட்டிருந்தனர். இந்த வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் விளம்பரம் சுற்றுவட்டாரங்களில் படுபயங்கரமாக வைரலானது. இதையடுத்து விளம்பரத்தை100 பேர் பார்த்ததற்கான சான்றுகளுடன் ஏராளமானோர் கடை முன்பு குவிந்தனர். அனைவருக்கும் ஹெட்போன் வழங்க முடியாததால் அவர்களுக்கு அல்வா கொடுக்கும் வகையில் இரவு 7 மணிக்கே நிறுவனத்தினர் கடையை பூட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனால், வெளியூர்களில் இருந்து வந்து ஏமாந்த இளைஞர்கள் இலவச ஹெட்போன் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 38 பேருக்கும் மறுநாள் ஹெட்போன் தருவதாக நிறுவனத்தினர் உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டது.