சென்னையில் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர், வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழந்தனர்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க லட்சக் கணக்கானோர் வந்திருந்த நிலையில், வெயில் காரணமாகவும், கூட்ட நெரிசல் காரணமாகவும் பலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியபோது, மயக்கம் அடைந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் என்பவர், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோன்று, திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
வான் சாகச நிகழ்ச்சியின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார். பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன், 10 வயது சிறுமியுடன் வந்திருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போது, ஓமந்தூரார் மருத்துவமனை அருகே மயக்கம் அடைந்தார். ஓமந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது போல, மெரினா அருகே தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்த மரக்காணத்தை சேர்ந்த மணி என்பவர், மாலை 4 மணி அளவில், மெரினா மணற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வான் சாகச நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாகவும், அவர்களில் 93 பேர் சென்னையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.