பேச கூடாததெல்லாம் பேசிய Jr`நித்தி'.. ஆசிரியருக்கு மிரட்டல் - எந்த தீவுக்கு பறப்பார் மகாவிஷ்ணு..?

Update: 2024-09-06 11:24 GMT

சென்னையில் உள்ள 2 அரசு பள்ளிகளில் மகா விஷ்ணு என்ற ஆன்மிக சொற்பொழிவாளர் மாணவர்கள் மத்தியில் பேசியது சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது... நடந்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

சென்னையில் உள்ள அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியிலும் பரம்பொருள் அறக்கட்டளை சார்பில் மாணவர்களை ஊக்கப்படுத்துவம் வகையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...

அதில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற மகா விஷ்ணுவுக்கு உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டது...

கல்வி சம்பந்தமாக உரையாற்றப் போகிறார் என அனைவரும் காத்திருக்க... திடீரென நல்ல நேரம்...கெட்ட நேரம்...நித்யானந்தா குண்டலினியை எழுப்புவதாய் பரபரப்பைக் கிளப்பியதைப் போல...மந்திரத்தை சொல்லி பறப்பது எப்படி?...நெருப்பு மழை வரவழைப்பது எப்படி? என்றெல்லாம் பேசத் துவங்கியுள்ளார் அவர்..

ஆன்மிகம் பற்றி விரிவாக பேசிய மகா விஷ்ணு...கடவுள் தான் எல்லாம்...என்பதைப் போல் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது... மகா விஷ்ணுவின் பேச்சைக் கேட்டு ஏராளமான மாணவிகள் கண்ணீர் வடித்தனர்...

அதேபோல் இந்தப் பிறவியில் நாம் என்னவாக பிறந்தோமோ அதற்கு முற்பிறவியின் பலன்கள் தான் காரணம் என மகா விஷ்ணு பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது...

இதைக் கேட்டு கொதித்தெழுந்த ஆசிரியர் ஒருவர் இது மாணவர்களுக்கான மோட்டிவேஷனல் பேச்சா? இல்லை மறுபிறவி பேச்சா? என எதிர்த்துக் கேள்வி எழுப்பினார்...


அரசுப் பள்ளியில் ஆன்மிகம் பேசக்கூடாது என யார் சொன்னது என்று Law பாயிண்ட்டெல்லாம் எடுத்துப் பேசினார் மகா விஷ்ணு...

அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என யார் சொன்னது?

பாவ புண்ணியம் பற்றி போதிக்காமல் ஆன்மீகம் எப்படி போதிப்பது?

ஆன்மீக சொற்பொழிவாளர் மகா விஷ்ணுவின் பேச்சு ஆசிரியர்கள் பலரைக் கொதிப்படையச் செய்துள்ளது...

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களான சண்முக சுந்தரம் மற்றும் தமிழரசி ஆகியோர் விளக்கம் அளிக்க, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் இணையத்தில் பூதாகரமான நிலையில் அரசு அனுமதி இல்லாமல் கல்விக்கு சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் இனி பள்ளிகளில் நடைபெறக்கூடாது என பள்ளி கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்... மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்...

மகா விஷ்ணு அரசுப் பள்ளிகளில் ஆன்மிகம் பேசி வம்பில் மாட்டியுள்ள நிலையில்... அரசே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குத் துணை போகலாமா எனவும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்