போலீசார் மதுபானம் வாங்கி கொடுத்து திருட்டு கேஸ் போட்டங்க என திருட்டு வழக்கில் புகார் கொடுத்தவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சொன்ன சாட்சி திடுக்கிட செய்திருக்கிறது.
நெல்லை வெள்ளாங்குளியை சேர்ந்த முருகன் மற்றும் பாபு, போலீசார் பொய்யாக செயின் பறிக்க முயற்சி வழக்கை போட்டுவிட்டதாக, ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கை நீதிபதி நக்கீரன் விசாரித்த போது, குற்றவாளிகள் மீது நெல்லையில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக ஜாமீனுக்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
வழக்கில் புகார் கொடுத்த நாராயணன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி நேரடியாக விசாரித்த போது, போலீசார் மது மற்றும் சாப்பாடு வாங்கி கொடுத்து வெற்று பேப்பரில் கையெழுத்து போட சொன்னார்கள், அடிக்கு பயந்து போட்டுவிட்டேன், இப்போது தவறை உணர்ந்து சாட்சி சொல்கிறேன் என்றார்.
உடனடியாக இதுபோன்ற செயல் சரியா? என காவல்துறைக்கு கேள்வியை எழுப்பிய நீதிபதி, குற்றவாளி மீது 20, 30 வழக்கு இருப்பதாக சொல்வது போலீசுக்கு பெருமைதராது, அவப்பெயரைதான் உண்டாக்கும் என கடிந்துக்கொண்டார். பொய் வழக்கு போட்டு, 20 வழக்குகள் இருக்கிறது என்பது காவல்துறைக்கு பெருமையா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுபோன்ற செயல்களில் இனி காவல்துறை ஈடுபட வேண்டாம் எனக் கூறி, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்