'Address' கேட்பது போல் நடித்து கடத்தப்பட்ட மாணவி..விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த ஷாக்.| Chennai
சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகள், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 29ஆம் தேதி வழக்கம் போல கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, காணாமல் போன நந்தினி, ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் செல்போன் மூலமாக அவரது பெற்றோரை தொடர்புகொண்டு, மதுரவாயலில் இருப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியை மீட்டனர். ஆட்டோவில் வந்த நபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து முகத்தில் ஸ்பிரே அடித்து கடத்தியதாகவும், பின்னர் சுய நினைவு வந்தவுடன் மதுவாயலில் உள்ள வளப்பகுதியில் படுத்து கிடந்ததாகவும் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையில், மாணவி கடத்தப்பட்டதாக கூறப்படும் இடத்தில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அதுபோன்று எந்தவொரு காட்சிகளும் பதியவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மாணவி உண்மையிலேயே கடத்தப்பட்டரா? அல்லது நாடகமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.