ஒசூர் அருகே இஸ்லாம்பூரில் மீண்டும் கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இஸ்லாம்பூர், அடவிசாமிபுரம் கிராம பகுதிகளில் சமீபத்தில் சிறுத்தை நடமாட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தெரு நாய்களையும், ஆடுகளையும் வேட்டையாடி கொன்றது. சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்ட போதும் அவை சிக்கவில்லை. சில நாட்களாக அப்பகுதிக்கு வராத சிறுத்தை இப்போது மீண்டும் வர தொடங்கியிருக்கிறது. மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை சிறுத்தை கடித்து தூக்கி சென்றுள்ளது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுத்தை நடமாட்டம் அச்சம் காரணமாக கிராமத்திலிருந்து தெருநாய்கள் மற்ற பகுதிகளுக்கு ஓட்டம் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அப்பகுதியில் ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை பிடிக்க கூண்டை வைத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பாக இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே 2, 4 சிறுத்தைகள் நடமாட்டம் தென்படுவதாக சொல்லும் மக்கள், இன்று ஆட்டை கொல்லும் சிறுத்தை மனிதர்களை கொல்லும் முன்பாக அவைகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள்.